குட்டம் மார்த்தாண்டன் வரலாறு ஒரு சிறு பார்வை.

கருத்துகள் இல்லை
 பத்மநாபபுரம் அரண்மனை

 குட்டம் ஆனந்தவல்லி அம்மன் கோவில்
திருச்செந்தூரில் இருந்து - கன்னியாகுமரி செல்லும் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது குட்டம் என்ற கிராமம். நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட இங்கு பிரசித்திபெற்ற ஆனந்தவல்லி அம்மன் கோவில் அமைந்துள்ளது.


குட்டம் - உருவான வீர வரலாறு

 
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள குளக்கரையில் கேரளாவில் இருந்து புதிதாய் வந்த சில குடும்பத்தினர் குடியேறினர்.

அன்றைய கேரளாவின் வேணாட்டு அரசில் சர்வ அதிகாரங்களும் பெற்றிருந்த இவர்கள், அப்பகுதியில் உள்ளூர் நிலப்பிரபுக்களாக திகழ்ந்தனர். ‘எட்டு வீட்டில்  பிள்ளைமார்’ (பேச்சு வழக்கில் எட்டு வீட்டு பிள்ளைமார்) என்ற உயரிய வகுப்பைச் சேர்ந்த இவர்கள், பத்மநாபபுரத்தில் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள - புகழ்பெற்ற அரண்மனைக்கு சொந்தக்கார ஊர்தான்!) வாழ்ந்தனர். மக்கள் தலைவர்களாக செயல்பட்ட இவர்களைச் சார்ந்தே நாட்டை  ஆளும் மன்னர்களும் இயங்கினர்.

இந்நிலையில், வேணாட்டு அரசின் புதிய மன்னராக வாரிசு முறையில் பொறுப்பேற்ற மார்த்தாண்ட வர்மா கி.பி.1729 முதல் 1758 வரை ஆட்சி செய்தார்.  இவரது ஆட்சிக் காலத்தில் வேணாட்டு அரசின் தலைநகரான பத்மநாபபுரம் மாற்றம் செய்யப்பட்டது. அரசின் பெயரும் மாறியது.

திருவிதாங்கூர் சமஸ்தானம்’ என்ற பெயரில் தனது நாட்டை பல அதிரடி நடவடிக்கைகளால் விரிவாக்கம் செய்த மார்த்தாண்ட வர்மா, திருவனந்தபுரத்திற்கு தனது தலைநகரை மாற்றினார்.

அப்போது, எட்டு வீட்டு பிள்ளைமார்களின் அதிகாரத்தை ஒடுக்க நினைத்த மார்த்தாண்ட வர்மா, அவர்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டார். அதிகாரங்களை பறித்தார். அவர்கள் தனக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் திசை திரும்பலாம், ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கலாம் என்பதால்  அவ்வாறு செய்தார். மேலும், எட்டு வீட்டு பிள்ளைமார்களின் அளவற்ற சொத்துக்களையும் பறிமுதல் செய்தார். அவர்களது குடும்பப் பெண்களுக்கும்  பல்வேறு வகைகளில் துன்பங்கள் விளைவித்தார்.


மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட எட்டு வீட்டு பிள்ளைமார்களில் ஒரு பிரிவினர், தங்களது அதிகாரத்தை வேறு ப குதியில் நிலைநாட்ட முயன்றனர். அதன் தொடர்ச்சியாக, பத்மநாபபுரத்தில் இருந்து கிழக்கு திசை நோக்கி நீண்ட பயணம் மேற்கொண்டனர்.


வங்காள விரிகுடா கடற்கரையோரம் இயற்கை செல்வச் செழிப்புடன் காணப்பட்ட பகுதியை அடைந்ததும், அங்கே தங்களது புதிய குடியேற்றத்தை நிறுவினர்.  இந்த எட்டு வீட்டுப் பிள்ளைமார்தான் இன்றைய குட்டம் மார்த்தாண்டன் வகையறாக்கள்.


வேணாட்டு அரசில் ஒரு மன்னனுக்கு இணையான அதிகாரமும், ஆட்சியை கைப்பற்றும் பலமும் பெற்றிருந்த இவர்கள், தாங்கள் குடியேறிய புதிய பகுதியில்  ஒரு குறுநில அரசை அமைத்தனர். ‘மார்த்தாண்டன்’ என்ற பட்டப் பெயரோடு அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளை ஆட்சி  செய்தனர். அவர்களில் முக்கியமான மன்னர் நவாப் குமார வீரமார்த்தாண்டன்.


ஆரம்ப காலத்தில் இவர் குமார வீரமார்த்தாண்டன் என்றுதான் அழைக்கப்பட்டார். ஒருமுறை, தன்னை எதிர்த்துப் போரிட்ட ஆற்காடு நவாப் படையினரை  மிகவும் தீரத்தோடு எதிர்த்து போரிட்டார். அதைப் பார்த்து வியந்த ஆற்காடு நவாப், தனக்கு இணையான ‘நவாப்’ பட்டத்தை அவருக்கு வழங்கி பெருமை  சேர்த்தான்.

நவாப் குமார வீரமார்த்தாண்டனுக்குப் பிறகு, அவரது வழி வாரிசுகளான ‘மார்த்தாண்டன் வகையறாக்கள்’ அப்பகுதியில் ஆட்சி அதிகாரம்  செலுத்தினர்.
இந்த ஊரில் வசிக்கும் மக்களில் ஆண்கள், தங்கள் பெயருக்கு முன்பு மார்த்தாண்டன் என்ற பெயரை சேர்த்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த காலத்தில் இந்த பகுதியில் ஆட்சியுரிமை செலுத்திய நவாப் குமார வீர மார்த்தாண்டன் என்பவரது வகையறாக்கள்தான் இன்றைய குட்டம் வாழ் மார்த்தாண்டன் குடும்ப மக்கள். சான்றோர் எனப்படும் நாடார் ஜாதியினரே இப்பகுதியில் மார்த்தாண்டன் வகையறாக்கள் என்று சிறப்புத் தகுதியுடன் அழைக்கப்படுகின்றனர்.

இன்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் குட்டம் வாழ் மார்த்தாண்டன் வகையறாக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும், ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை நடைபெறும் ஆனந்தவல்லி அம்மன், முத்துமாரியம்மன் சமேத சிவனணைந்த பெருமாள் கோவில்களின் திருவிழாவில் தங்கள் குடும்பம் சகிதமாக கலந்து கொள்கிறார்கள்.

இந்த ஊரில் பிறந்து வளர்ந்த ஆயிரக்கணக்கானபேர் ஆடித் திருவிழாவுக்காக ஒரே இடத்தில் குவிவது மற்றவர்களை வியக்க வைக்கிறது.

பெயர்க் காரணம்

பொதுவாக குளம் என்கிற குட்டையைத் தான் குட்டம் என்றும் அழைப்பர். இந்த ஊர் அமைந்துள்ள பகுதியும் தாழ்வானதுதான். ஒருகாலத்தில் இங்குள்ள குளக்கரையிலேயே கேரளாவில் இருந்து வந்த சிலர் குடியேறினர். அவர்களே இங்கு பல்கி பெருகினர். மார்த்தாண்டன் என்ற பட்டப்பெயரோடு இப்பகுதியில் ஆட்சியுரிமையும் பெற்றிருந்தனர். அவர்களே இன்றுள்ள குட்டம் வாழ் மார்த்தாண்டன் வகையறாக்கள்.

வரலாற்று ஆதாரம்

குட்டம் கிராமத்தில் இருந்து திசையன்விளை செல்லும் வழியில் உள்ள - கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் ஊரில் கால்டுவெல் என்ற புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ சமய பேரறிஞர் வசித்து வந்தார். இன்றும் அங்குள்ள மேல்நிலைப்பள்ளி அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. அவர், குட்டத்தில் அன்று வாழ்ந்த மார்த்தாண்டன் வகையறாக்கள், அப்பகுதியில் ஆட்சியுரிமை பெற்றிருந்ததையும், மக்களிடம் வரிவசூலில் ஈடுபட்டு வந்ததையும் பதிவு செய்கிறார்.

சரி... யார் இந்த கால்டுவெல்?

ராபர்ட் கால்டுவெல் என்பதுதான் இவரது முழுமையான பெயர். திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். 

1814-ம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்த இவர். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 

24 வயதில் லண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கு என்று 1838 ஜனவரி 8-ம் தேதி சென்னைக்கு வந்து சேர்ந்தார். தமிழகத்தில் கிறிஸ்தவ சமயத்தை பரப்ப வேண்டும் என்றால், அந்த மக்கள் பேசும் மொழியை அறிய வேண்டும் என்று நினைத்தார். அதன்தொடர்ச்சியாக எளிதிய தமிழை வெகுவிரைவிலேயே கற்றுத் தேர்ந்தார்.

1841ல் குரு பட்டம் பெற்ற இவர், இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் கிறிஸ்தவ மதத்தை பரப்பினார். இப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர் (இன்றும் இடையன்குடியில் வாழும் மக்களில் 90 சதவீதம்பேர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களே).
 கால்டுவெல் ஆங்கில மொழியில் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் அவருக்கு பெரும் புகழை ஈட்டித்தந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந்த நூல் மூலம் விளக்கினார். 

கால்டுவெல் மிகவும் எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்தார். பல நேரங்களில் எங்கு சென்றாலும் நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஊர்களில் கிடைக்கும் காய்கனிகள்தான் இவருக்கு பிடித்த உணவு. இடையன்குடி பகுதியில் வெயிலின் தாக்கம் அப்போதும் இப்போதும் அதிகமே. அதனால் கூரை வீட்டிலேயே தங்கியிருப்பார்.
1877-ம் ஆண்டு இப்பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தில் வாடிய மக்களுக்குப் பல உதவிகள் செய்தார். அந்த ஆண்டே இவர் திருநெல்வேலி ஆயராக திருநிலைப்படுத்தப் பட்டார். 

பணியில் இருந்து ஓய்வுபெற்று, கொடைக்கானல் சென்ற இடத்தில் 1891 ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி இயற்கை எய்தினார் கால்டுவெல். இவரது உடல் இடையன்குடிக்குக் கொண்டுவரப்பட்டு, அவர் உருவாக்கிய தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நிலைமைகார நாடார்கள்

கால்டுவெல் வசித்த இடையன்குடி பகுதி, அப்போது குட்டம் ஊரைச் சேர்ந்த மார்த்தாண்டன் வகையறாக்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. குட்டத்தில் வாழ்ந்த அவர்கள் நிலப் பிரபுக்களாக இருந்தனர். இவர்கள், கால்டுவெல்லுக்கு இடையன்குடியை 99 வருட குத்தகைக்கு விட்டனர்.
இடையன்குடியில் வாழ்ந்த அனைத்து ஜாதி மக்களுமே குட்டம் மார்த்தாண்டன் வகையறாக்களுக்கு குடியிருப்புவரி, குடும்பங்களில் நிகழும் சுப, அசுப காரியங்களுக்கு உரிய வரிகள் ஆகியவற்றைச் செலுத்தி வந்தனர். 99 வருடக் குத்தகை எடுத்தவர்கள்கூடக் குடியிருப்பு வரி செலுத்துவதில் இருந்து மட்டுமே விலக்களிக்கப்பட்டிருந்தனரே தவிர, அவர்கள் குடும்பத்து மங்கல, அமங்கல நிகழ்ச்சிகளுக்கு வரிகட்டியாக வேண்டும் என்கிற நிலையும் இருந்தது.

கால்டுவெல் தாம் குத்தகைக்கு எடுத்த பகுதியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பனையேறிச் சான்றார் போன்ற சான்றோர் சமூகத்தின் கீழ் அடுக்குகளைச் சேர்ந்த மக்களைக் குடியேற்றி அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தார். தேவாலயம், தேவாலயத்தோடு சேர்ந்த பள்ளிக்கூடம் ஆகியவற்றையும் கட்டினார். 

இந்நிலையில் அங்கு வாழ்ந்த கிறிஸ்தவ மக்களின் குடும்பங்களில் நடக்கும் மங்கல அமங்கல நிகழ்ச்சிகளுக்கான வரியினைக் குட்டம் மார்த்தாண்ட நாடார்கள் கட்டாயமாக வசூலிக்க முயன்றனர். தாம் 99 ஆண்டு நிலவரியைக் குத்தகையாகக் கொடுத்துவிட்டதால் மேற்கொண்டு வரி எதுவும் தம் ஊரில் குடியிருக்கும் மக்கள் கொடுக்கமாட்டார்கள் என்று கால்டுவெல் கூறினார். 

குடியிருப்பு வரி செலுத்துவதில் இருந்துதான் விலக்களிக்கப்பட்டு உள்ளதே தவிர, அரசு இறை அல்லது ஜோடி வரி வசூலிக்கும் உரிமையைத் தங்கள் வசமே வைத்திருப்பதாகவும், அதுதான் தம்மையத்த நிலைமைக்கார நாடார்கள் வழக்கம் என்றும் குட்டம் மார்த்தாண்ட நாடார்கள் குறிப்பிட்டனர்.

குட்டத்தைச் சுற்றியுள்ள கொம்மடிக்கோட்டை, படுகைப்பத்து, செட்டியாபத்து, தண்டுபத்து, காயாமொழி போன்ற 50-கும் மேற்பட்ட நிலைமைக்கார நாடார்களின் ஊர்கள் உள்ளன. அவ்வூர்களில் அரச குலச் சான்றோரான நிலைமைக்கார நாடார்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களெல்லாம் தம் குடிகள் மீது தொடர்ந்து தம் அதிகாரத்தைச் செலுத்தி வந்தனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்தக் காலக்கட்டத்தில்தான் (1822-1859) திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டு இருந்த நாஞ்சில் நாட்டில் தோள் சீலை போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அங்குள்ள சான்றோர் (நாடார்) உள்ளிட்ட 18 ஜாதிப் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று சமஸ்தான அரசாங்கத்தால் வற்புறுத்தப்பட்டனர் (அந்த சமஸ்தானத்தைப் பொறுத்தவரை, சான்றோர் உள்ளிட்ட 18 ஜாதியினர் தாழ்த்தப்பட்டவர்களாக அன்று அறிவிக்கப்பட்டு இருந்தனர்). அதை மீறியவர்கள் கொடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டனர். அய்யா வைகுண்டர் போன்றோரது எழுச்சியால் தோள் சீலை அணியும் தகுதியைப் பெற்றனர் நாஞ்சில் நாட்டு 18 ஜாதியினர்.

அதேநேரம், நாஞ்சில் நாட்டை ஒட்டியிருந்த தமிழக பகுதியான குட்டம் உள்ளிட்ட நிலைமைகார நாடார்கள் வசித்து வந்த பகுதியில் அவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இப்பகுதியில் குட்டம் மார்த்தாண்டன் வகையறாக்கள் உள்ளிட்ட நிலைமைகார நாடார்கள் ஆதிக்கம் செலுத்தியிருக்காவிட்டால் நாஞ்சில் நாட்டு அவலம் இப்பகுதியிலும் அரங்கேறியிருக்கலாம்.

குட்டம் மார்த்தாண்டன் வகையறாக்களின் வலிமை இன்று வரையிலும் நிலைநாட்டப்பட்டு வருவது பாராட்டுக்குரியது.
- நெல்லை விவேகநந்தா

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக